ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கலாம் என உங்கள் மருத்துவர் அனுமதி கொடுத்துவிட்டாரா? ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ? அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா?
குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்? என்ற கட்டுரையை படித்த பிறகு நீங்கள் திட உணவை கொடுக்க தயாராகி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
குழந்தைக்கு திட உணவை கொடுப்பது குறித்து என்னதான் பல்வேறு வகையான செய்திகளை நீங்கள் படித்தாலும் ஒரு தாய் தான் தன் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்… தன் குழந்தைக்கு எது நல்லது? எதை எப்படி கொடுக்கலாம்? என அம்மாவுக்கு தானே தெரியும்.
முதன்முதலில் குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது ஜீரண சக்தி என்பது குறைவாகவே இருக்கும். எனவே நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதீத ஆர்வம் காட்டாமல் பொறுமையாக கையாளுங்கள். ஒவ்வொரு உணவாக அறிமுகப்படுத்தும் போது பொறுமை மிக அவசியம்…
1. 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள் :
எந்த உணவாக இருந்தாலும் 3 நாள் கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் உணவு உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா என்பதை சோதனை செய்ய 3 நாட்கள் தேவை. எனவே பெற்றோர் இதனை முறையாக பின்பற்றுங்கள்…
- முதல் முறையாக உணவை கொடுக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவை ஒரு முறை கொடுக்க வேண்டும்.
- 2வது நாள் 2 டேபிள் ஸ்பூன் உணவை 2 முறை தர வேண்டும்.
- 3வது நாள் அதனை 3 டேபிள் ஸ்பூனாக அதிகரித்து 2 முறை கொடுங்கள்
ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 15 மில்லி இருக்கும் என்பதால் 3 நாட்களில் நீங்கள் 90 மில்லி உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பீர்கள்…
அப்டேட் 2015 – ஆனால் அதேநேரம் எல்லா உணவுகளையும் அறிமுகப்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்தவித உணவும் அலர்ஜி ஏற்படுத்தவில்லை எனும் போது 3 நாள் விதிமுறை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இதனால் விதவிதமான ருசியுடன் கூடிய உணவுகளை குழந்தைகள் சுவைக்கும் போது எதிர்காலத்தில் அவர்கள் உணவை சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். ஆனால் 3 நாள் விதிமுறையை நீங்கள் பின்பற்றுவது குறித்து உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி, இதனை பின்பற்றுவது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
1. ஒருவேளை குழந்தைக்கு வயிற்று வலி உள்ளிட்ட அவஸ்தைகள் ஏற்பட்டால் நீங்கள் கொடுக்கும் உணவை உடனே நிறுத்தி விடுங்கள். அதேநேரம் அடுத்த புது உணவை கொடுப்பதற்கு ஒருநாள் இடைவெளி விட்டு பிறகு கொடுக்கலாம். ஏற்கனவே ஒத்துக்கொள்ளாமல் போன உணவை அப்படியே விட்டு விடாமல் 4 அல்லது 6 வாரங்களுக்கு பிறகு கொடுத்துப் பாருங்கள்…
2. முதன் முதலில் உணவை கொடுக்கும் போது தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து கஞ்சி போன்ற பதத்தில் கொடுங்கள். அதன்பிறகு கொஞ்சம் கெட்டியான பதத்தில் கொடுக்கலாம்…
3. ஒவ்வொரு முறை உணவை கொடுக்கும் போதும் சாப்பிடும் சூட்டில் இருக்கிறதா? என்பதை சோதனை செய்த பிறகே கொடுக்கவும்…
4. உணவு கொடுக்கும் பாத்திரங்களை வெந்நீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்வது அத்தியாவசியமானது. இதற்கென மார்கெட்டுகளில் ஏராளமான பொருட்கள் கிடைக்கிறது. இதனையும் வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.
குழந்தைகளின் உணவுப் பொருட்களை அரைப்பதற்கென தனியாக மிக்ஸி ஜாரை பயன்படுத்துங்கள். ஏனெனில் வீட்டில் மசாலா உள்ளிட்ட பொருட்களை அரைக்க நீங்கள் பயன்படுத்தும் ஜாரின் அடியில் சில பொருட்கள் தங்கிவிடும். இதனை நீங்கள் சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில் அதில் குழந்தைகளுக்கான உணவை சேர்க்கும் போது அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். எனவே இதிலும் எச்சரிக்கையாக இருங்கள்…
5. காலை 11 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரையும் நீங்கள் உணவை கொடுக்கலாம்… காலை நேரத்தில் நீங்கள் கொடுக்கும் உணவானது அவர்களின் மதிய உணவு நேரம் என்பதால் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு பழக்கமான ஒன்றாகிவிடும்.
6. குழந்தைகளுக்கு பால்புட்டி பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு டம்ளர்,கப், ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துங்கள்.
7. குழந்தைகளுக்கு ஏற்கனவே அறிமுகமான 2 உணவுப்பொருட்களை ஒரே நேரத்தில் சேர்த்து தரலாம். ஆனால் புதிதாக கொடுக்கும் போது இரண்டு புதிய உணவுகளை ஒன்றாக சேர்த்து தராதீர்கள். ஒருவேளை குழந்தைக்கு அலர்ஜி அல்லது வயிற்று வலி ஏற்பட்டால் அது எந்த உணவால் உண்டானது என்பது தெரியாமல் போய்விடும்.
8. குழந்தை நீங்கள் கொடுக்கும் உணவை சாப்பிடவில்லை என எப்போதும் கவலைப்படாதீர்கள். அதே உணவை வேறொரு முறையில் செய்து கொடுங்கள். ஒருவேளை அந்த உணவு உங்கள் குழந்தைக்கு பிடிக்கலாம். உங்கள் குழந்தை நீங்கள் கொடுக்கும் உணவை முழுமையாக சாப்பிட சில மாதங்கள் கூட ஆகலாம். ஆனால் அதற்காக கவலைப்படாதீர்கள்.
9. குழந்தைகளின் உணவில் உப்பு, சர்க்கரை, தேன் போன்றவற்றை சேர்க்க வேண்டாம். உப்பு சப்பில்லாமல் குழந்தைக்கு உணவு கொடுக்கிறோமே என கவலைப்படாதீர்கள். ஏனென்றால் குழந்தையின் நாக்கில் சுவை மொட்டுகள் சுத்தமாக இருக்கும். ஒரு உணவை சுவைத்து பழகிவிட்டால் மீண்டும் மற்ற உணவுகளை சாப்பிட மறுக்கும். ஒரு வயதுக்கு குறைவான குழந்தையின் உணவில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்க கூடாது.
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்கும் போது என்னென்ன பொருட்கள் தேவை என்பது குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
முதல் முறையாக உணவை கொடுக்கும் போது அது ஜூஸ், சூப், கூழ் போன்றே இருக்க வேண்டும்.
முதல் வாரம் :
முதல் நாள் – ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் என்ற அளவில் தொடங்குங்கள் (முதன் முதலில் கொடுப்பதற்கு ஆப்பிள் கூழ் சிறந்தது. இனிப்பானதாகவும் இது இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கொஞ்சம் சேர்த்து கொடுங்கள்)
2ஆம் நாள் – வேகவைத்து மசித்த ஆப்பிளை 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு அதிகமாக்கி 2 முறை கொடுங்கள்
3ஆம் நாள் – வேகவைத்து மசித்த ஆப்பிளை 3 டேபிள்ஸ்பூன் என 2 வேளை கொடுங்கள்
4ஆம் நாள் – ஆப்பிளுக்கு அடுத்ததாக நீங்கள் காய்கறியை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். முதலில் கேரட்டை கொடுப்பது நல்லது. கேரட்டை வேக வைத்து மசித்து அல்லது ஜூஸாகவோ ஒரு டேபிள்ஸ்பூன் அளவை ஒருவேளை கொடுக்கலாம்.
5 ஆம் நாள் – இந்த கேரட் ஜூஸ் அல்லது மசித்த கேரட்டை 2 டேபிள் ஸ்பூனாக அதிகரித்து 2 முறை தரவும்.
6ஆம் நாள் – கேரட் ஜூஸ் அல்லது வேக வைத்து மசித்த கேரட்டை 3 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்கவும்.
7ஆம் நாள் – காலை வேளையில் வேகவைத்து மசித்த ஆப்பிளையும், மாலையில் வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸ் தரவும்…
2 வது வாரம் :
முதல் நாள் – ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி கஞ்சி (ஒரு முறை)
2ஆம் நாள் – 2 டேபிள்ஸ்பூன் அரிசி கஞ்சியை காலையிலும் மதியம் ஆப்பிள் அல்லது கேரட்டை வேகவைத்து மசித்து தரவும்.
3ஆம் நாள் – 3 டேபிள்ஸ்பூன் அரிசி கஞ்சியை காலையிலும், மதியம் கேரட் அல்லது ஆப்பிளை வேகவைத்து மசித்து தரவும்.
4ஆம் நாள் – காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் வேகவைத்து மசித்த பேரிக்காயை ஒரு முறையும், மதியம் ஆப்பிள் அல்லது கேரட்டை வேக வைத்து மசித்து தரவும். (ஏற்கனவே நீங்கள் அறிமுகப்படுத்திய ஏதேனும் ஒரு உணவாக இருக்கலாம்)
5ஆம் நாள் – காலையில் 2 டேபிள் ஸ்பூன் வேகவைத்து மசித்த பேரிக்காயை ஒரு முறையும், மதியம் ஆப்பிள் அல்லது கேரட்டை தரவும். (ஏற்கனவே நீங்கள் அறிமுகப்படுத்திய ஏதேனும் ஒரு உணவாக இருக்கலாம்)
6ஆம் நாள் – 3 டேபிள்ஸ்பூன் வேகவைத்து மசித்த பேரிக்காயை காலை வேளையிலும், மதியம் ஆப்பிள் அல்லது கேரட்டை தரவும். (ஏற்கனவே நீங்கள் அறிமுகப்படுத்திய ஏதேனும் ஒரு உணவாக இருக்கலாம்)
7 ஆம் நாள் – ஏற்கனவே பழகிய உணவு வகைகளை உங்கள் விருப்பப்படி தரலாம்
3வது வாரம் :
முதல் நாள் – காலையில் வேகவைத்து மசித்த பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு ஒரு முறையும், மதியம் ஏற்கனவே கொடுத்த ஏதேனும் ஒரு உணவை கொடுக்கவும்.
2ஆம் நாள் – காலையில் வேகவைத்து மசித்த பருப்பு 2 டேபிள்ஸ்பூன்.. மதியம் ஏற்கனவே கொடுத்து வந்த உணவுகளில் ஏதேனும் ஒன்று தரலாம்.
3ஆம் நாள் -காலையில் 3 டேபிள் ஸ்பூன் வேகவைத்து மசித்த மருப்பு..மதியம் ஏற்கனவே கொடுத்த உணவுகளில் ஏதேனும் ஒன்று தரலாம்.
4ஆம் நாள் – புதிதாக ஏதேனும் ஒரு பழவகை அல்லது காய்கறி கூழ் ஒரு டேபிள் ஸ்பூன்… மதியம் ஏற்கனவே கொடுத்த உணவுகளில் ஒரு வகையை அதே அளவில் தரலாம்.
5 ஆம் நாள் – புதிதாக ஏதேனும் ஒரு காய்/ பழ வகையை 2 டேபிள்ஸ்பூன் அளவும், மதியம் ஏற்கனவே கொடுத்த உணவுகளில் ஒன்றையும் அதே அளவில் தரவும்.
6ஆம் நாள் – புதிதாக கொடுத்த காய்/ பழ வகையை 3 டேபிள்ஸ்பூன் அளவும், மதியம் ஏற்கனவே கொடுத்த உணவுகளில் ஒன்றை 3 டேபிள்ஸ்பூன் அளவும் தரவும்.
7ஆம் நாள் – ஏற்கனவே கொடுத்த உணவுகளில் இருந்து தரலாம்.
4வது வாரம்:
ஏற்கனவே கொடுத்து வந்த அரிசி கஞ்சி போன்ற உணவுகளை காலை வேளையிலும், மதியம் காய்கறி அல்லது பழங்களையும் 4 வது வாரத்தில் கொடுத்து வாருங்கள். ஒருவேளை புதிய உணவு கொடுப்பதாக இருந்தால் 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்…
இதில் குறிப்பிட்டுள்ள காய்கறிகள் பழங்கள் எல்லாம் ஒரு சாம்பிளுக்கு தான். ஆனால் நீங்கள் சீசனுக்கு ஏற்றார் போல உங்கள் விருப்பமானதை தரலாம்…
பழங்கள் :
ஆப்பிள் கூழ்
பேரிக்காய் கூழ்
ஆப்பிள் கூழ் உடன் சிறிது பட்டையை தூள் செய்து சேர்க்கலாம்,
வாழைப்பழ கூழ்
காய்கறிகள் :
கேரட் ஜூஸ்
கேரட் கூழ்
பரங்கிக்காய் கூழ்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு கூழ்
பீட்ரூட் கூழ்
கேரட் பீட்ரூட் சூப்
தானிய வகைகள் :
அரிசி கஞ்சி
வேகவைத்து மசித்த பருப்பு
பார்லி கஞ்சி
இவற்றையெல்லாம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்..
கூடுதல் ரெசிபிகள் உங்களுக்கு தேவையெனில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கு மாதம் வாரியாக உணவு அட்டவணையையும் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply