Kulandaikku pasumpaal tharalaama?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது?
குழந்தைகளுக்கு பசும்பால் தரலாமா?
பொதுவாகவே ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்பால்தான் அவசியமான உணவு. பால் சுரப்பு குறையும்போதோ பால் கொடுக்க இயலாதபோதோ மற்றொரு பாலுக்கான தேவை ஏற்படும். தாய்ப்பாலுக்கு மாற்றாக என்ன கொடுக்கலாம் எனக் குழந்தை நல மருத்துவர்களிடம் கேட்டால், ‘ ஃபார்முலா மில்க் ஓகே ; பசும்பால் வேண்டாம்’ என்பதுதான் பதிலாக வரும். குழந்தைகளுக்கு பசும்பால் தருவதில் சர்ச்சை மட்டுமே இன்று வரை மிஞ்சுகிறது. குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? சுத்தமானது, இயற்கையானது என கருதப்படும் பசும்பாலை விட ஃபார்முலா மில்க் குழந்தைகளுக்குச சரியானதா? போன்ற பல
பெற்றோர்களின் சந்தேகங்களுக்கான பதில்தான் இந்தப் பதிவு..
பிறந்த குழந்தைகளின் உடலுறுப்புகள் அனைத்தும் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை. பெரியவர்களின் உடலில் இருக்கும் அனைத்து செரிமான நொதிகளும் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே இருப்பதில்லை. வளர வளரதான் இந்த நொதிகள் குழந்தைகளின் உடலில் செயல்படத் தொடங்கும். குழந்தையின் உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறுதான் தாய்ப்பாலில் சத்துகளும் அடங்கியுள்ளன. ஃபார்முலா மில்க்கும் தாய்ப்பாலின் அடிப்படையிலேதான் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. ஆனால் பசும்பால் அப்படியில்லை. “குழந்தைகளுக்கு தேவைப்படும் சில சத்துகள் பசும்பாலில் குறைவாகவும், சில தாதுக்கள் மற்றும் புரதம் போன்றவை அளவுக்கு அதிகமாகவும் இருப்பதால் பசும்பால் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல” என்கின்றனர் குழந்தைகள் நல நிபுணர்கள்.
செரிக்காத புரதம்
பாலில் உள்ள புரதங்களில் வே (whey) புரதம் மற்றும் கேசின் (casein) புரதம் என இரண்டு வகைகள் உள்ளன.
இதில் வே புரதம் எளிதில் செரிமானம் அடையக் கூடியது. இதுதான் தாய்ப்பாலிலும், ஃபார்முலா மில்க்கிலும் அதிகமாக காணப்படுகிறது.
பசும்பாலில் கேசின் புரதம்தான் அதிக அளவில் இருக்கிறது. இதைச் செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் செரிமான மண்டலம் வளர்ச்சியடைந்திருக்காது. இதனால் குழந்தைகளின் குடலில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
செரிக்கப்பட்ட புரதங்களை வெளியேற்றுவதில் சிறுநீரகத்தின் பங்கு மிக முக்கியமானது. தாய்ப்பாலில் குறைந்த அளவே புரதச்சத்து (1 கிராம்) உள்ளது. ஆனால் பசும்பாலில் உள்ள புரதச்சத்து (3.3 கிராம்) இருப்பதால்
குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு வேலைபளு அதிகமாகும். இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
அளவை மீறி சேரும் தாதுக்கள்
பசும்பாலில் தேவைக்கு அதிகமான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான தாதுக்கள் உடலில் சேர்ந்தால் சிறுநீர் உற்பத்தி பாதிக்கப்படலாம்.
கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் உடலில் இரும்புச்சத்துகளை கிரகிக்கும் திறன் குறைந்துவிடும். குழந்தைக்கு உணவின் மூலம்
கிடைக்கும் அனைத்து இரும்புச்சத்துகளும் கால்சியத்துடன் சேர்ந்து மலமாக வெளியேறிவிடும். இதனால் குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு ரத்தசோகை நோய் ஏற்படும்.
வைட்டமின் குறைபாடு
பசும்பாலில் வைட்டமின்கள் குறைவாகவே உள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி, காய்ச்சல் மற்றும் கிருமித்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கொழுப்பு அமிலங்கள் பற்றாகுறை
குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு லினோலிக் அமிலம் போன்ற சில அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் அவசியம். தாய்ப்பாலில் இருக்கும் இந்தக் கொழுப்பு சத்து பசும்பாலில் இல்லை.
கொழுப்புச்சத்து குறையும்போது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களும் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது . இதனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது.
சிக்கல் தரும் லாக்டோஸ் சர்க்கரை
லாக்டோஸ், இதுதான் பசும்பாலில் இருக்கும் முதன்மையான சர்க்கரை. இந்தச் சர்க்கரையை செரிக்க லாக்டேஸ் என்ற நொதி உடலில் சுரக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தைகளின் உடலில் இந்த நொதி அதிகம் சுரப்பதில்லை. இதனால் லாக்டோஸ் உடலில் தங்கி செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
பாக்டீயாவால் ஏற்படும் ஒவ்வாமை
பசும்பாலை பதப்படுத்தாமல் குழந்தைகளுக்கு தரும்போது அதிலிருக்கும் சில பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் காய்ச்சலையும் ஏற்படுத்தும். அதேசமயம் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலும் ஒரு வயது குழந்தைக்கு உகந்ததல்ல.
தாய்ப்பாலே பெஸ்ட்
தாய்ப்பாலில் இருக்கக்கூடிய பெரும்பாலான சத்துகள் அனைத்தும் ஃபார்முலா மில்க்கில் இருந்தாலும் இயற்கையிலே தாய்ப்பாலில் சுரக்கக்கூடிய நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் எந்தப் பாலிலும் கிடைப்பதில்லை. எனவே, 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் தர வேண்டும். ஒர் ஆண்டு வரை தாய்ப்பாலுடன் வீட்டிலே தயாரிக்கப்படுகின்ற இயற்கை உணவுகளைக் கொடுப்பது நல்லது. ஆர்கானிக் திட உணவுகளைச் சிறிது சிறிதாக கொடுக்கலாம்.
அதன்பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப எந்தப் பால் தரலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவு செய்துக்கொள்ளலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply