ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Tv and its effects on kids
குழந்தைகளைப் பாதிக்கும் டிவி… விளைவுகள் என்னென்ன? சரிசெய்வது எப்படி?
ஐந்து மாத ஆண் குழந்தை அவன். அழகாக இருப்பான். குண்டு குண்டு கண்கள். கவர்ச்சிகரமான சிரிப்பு. எப்போதும் துறுத்துறுவென்று இருப்பான். யார் தூக்கினாலும் அழாமல் இருப்பான். பார்த்த உடனே பிடித்துபோகின்ற முகம். ஆனால், அவனால் நம்மை முழுமையாகப் பார்க்க முடியாது. கண்கள் நன்றாகத்தான் இருக்கிறது. காதும் நன்றாகவே இருக்கிறது. பிறகு என்ன என்று என் மனதில் குழப்பம். நிதானமாக அவனின் அம்மாவிடம் கேட்டேன் ஏன் முகத்தைச் சரியாகக் குழந்தை பார்க்க மாட்டெங்கிறான். என்ன காரணம்… எதாவது பிரச்னையா…
அதற்கு அவனின் அப்பா, “ஊருக்கு போயிறதப்போ 2 மாசமா குழந்தையை ஹாலில் படுக்க வைத்து, அழக்கூடாது என்பதற்காகவும் ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இவங்க அம்மா வீட்டுல டிவியைப் போட்டுவிட்டாங்க. அந்த வெளிச்சம், சத்தம், பல நிறங்களில் வரும் படங்களைப் பார்த்து பார்த்து அவன் கழுத்தை டிவி பக்கமே திருப்புகிறான். இன்னொரு பக்கம் அவனால் இயல்பாகத் திருப்ப முடியல” எனச் சொன்னார்.
சின்னச் சிறு குழந்தைகளுக்கு டிவியின் சத்தம், பல வண்ணங்களில் நிழல் போல ஆடும் படம் இவற்றைப் பார்க்கும்போது தானாகவே சத்தத்தை நோக்கி, அதாவது டிவியை நோக்கி குழந்தைகள் பார்க்கத் தொடங்குகின்றனர். இந்தச் சிறிய குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். டிவியைப் பெரியவர்களே அதிக நேரம் பார்க்க கூடாது என்று சொல்லும்போது பிஞ்சு குழந்தைகள் அழக்கூடாது எனப் போட்டுவிடலாமா… இது எவ்வளவு பெரிய தவறு இல்லையா…
அந்தக் குழந்தையின் அப்பா நன்கு படித்தவர் என்பதால், குழந்தையின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப குழந்தையின் கவனத்தை இருபக்கமும் திசை திருப்பி, கழுத்தைத் திரும்ப வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்தார். இதைக் கவனிக்காமல் விட்டால் குழந்தையின் நிலை என்ன ஆவது… டிவி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தையே விளைவிக்கும். எப்படி?
ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளாக மாறும் வாய்ப்பு
முன்பெல்லாம் குழந்தையைத் தொட்டிலில் போட்டு கிலுகிலுப்புச் சத்தம், தொட்டில் ஆடும் ஒலி எழுப்பும் மணிகள், அருகில் காற்றில் ஆடும் திரைசீலைகள் இருக்கும். இப்படிப்பட்ட மென்மையான, மெதுவான நகர்தலைப் பார்க்கும் அளவுக்குதான் சிறிய குழந்தைகளின் திறன் இருக்கும். இதைப் பார்த்துப் பழகுவதுதான் சரியான முறையும்கூட. அதைவிட்டு வேகமான, திடீர் வெளிச்சங்களைக் காட்டும் டிவியைப் பார்த்தால் குழந்தைகளுக்கு வேகத்திறன் அதிகரிக்கும். அதீத இயக்கம் (ஹைபர் ஆக்டீவ்) பிரச்னை வரலாம்.
கண்கள் பாதிப்பு
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கண்களில் உள்ள ஈரப்பதம் நீங்கிவிடும். கண்கள் வறண்டுபோகும். சீக்கிரம் கண்ணாடி அணியும் பிரச்னை ஏற்படும். கிட்ட பார்வை, தூர பார்வை பிரச்னை வரலாம்.
வளர்ச்சியில் தடை
குழந்தைகள் என்றாலே கை, கால் அசைத்து, தவழ்ந்து, உட்கார்ந்து, நகர்ந்து செல்வதுதான் அழகும் ஆரோக்கியமும்கூட. வீட்டில் உள்ள பெரியவர்கள் வேலை செய்யவேண்டும் என்பதற்காக டிவியைப் போட்டுவிட்டு குழந்தையை கவனிக்காமல் விட்டால் குழந்தையின் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சித் தடைப்படலாம். பேசுவது, உட்கார்வது, முட்டிப் போடுவது, நடப்பது, கவனிப்பது போன்ற செயல்களில் தாமதம் ஏற்படலாம்.
படிப்பில் ஆர்வமின்மை
எந்தக் குழந்தை டிவி அதிகம் பார்க்கிறதோ அவர்கள் பின்னாளில் சோம்பேறியாகவோ இயல்பான மனநிலை இல்லாமலோ வளர்வார்கள். மற்ற குழந்தைகள்போல இல்லாமல் இவர்களின் செய்கைகளில் பேச்சில் மனநிலையில் வித்தியாசம் ஏற்படும். கவனச்சிதறல், நினைவுத்திறன், படிப்பில் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகள் வரும்.
தொப்பை, உடல்பருமன் வரலாம்
டிவியைப் பார்க்க வைத்து குழந்தைக்கு உணவு ஊட்டினாலோ டிவியைப் பார்த்துக்கொண்டே குழந்தை தானாக சாப்பிட்டாலோ… தான் என்ன சாப்பிடுகிறோம். எவ்வளவு சாப்பிடுகிறோம். என்ன உணவு… உணவின் ருசி, மணம் போன்ற எதுவும் தெரியாமல் குழந்தை சாப்பிடும். மேலும், மென்று தின்னும் பழக்கத்துக்கு வராமல் அப்படியே விழுங்கும் பழக்கத்துக்கு ஆளாகும். இதனால், செரிமானப் பிரச்னை, வயிறு உப்புசம், அஜீரணக் கோளாறு, தொப்பை, உடல்பருமன் ஆகிய அனைத்தும் வரிசையாக வரும்.
மாயாஜால உலகுக்கு தள்ளப்படுகின்றனர்
குழந்தைகள் என்றாலே ஓடி ஆடி விளையாடுவதுதான் அவர்களின் அடையாளம். கார்ட்டூன் படம், கிரிக்கெட், பாட்டு, படம் ஆகியவை பார்ப்பதல்ல. விளையாட்டை விளையாட வேண்டுமே தவிர டிவியில் கிரிக்கெட் விளையாட்டை வேடிக்கை பார்ப்பதல்ல.
ஜெட்டிக்ஸ், சக்தி மான், டாம் அண்ட் ஜெர்ரி போன்ற கேரக்டர்கள் மனதில் பதிந்து, இதுதான் உலகம் எனக் குழந்தை கற்பனைச் செய்யும். பத்தாண்டுகளுக்கு முன்பு, ‘சக்தி மான் காப்பாற்றுவான்’ எனக் கிணற்றில் குதித்தக் குழந்தைகளை நம்மால் மறக்க முடியுமா சொல்லுங்கள்… ஆபத்தை விளைவிக்கும் இந்த ‘ஹீரோயிசம் கதாப்பாத்திரங்களைப் பார்க்கும் குழந்தைகள்’ இவர்களை நிஜ மனிதர்கள் என நினைத்துக் கொள்வார்கள். எனவே பெற்றோர்களே… குழந்தைகளிடம் அதிகக் கவனம் செலுத்துங்கள்.
பேச்சில் சினிமாத்தனம்
நிறைய கார்ட்டூன்களில் மச்சா, டபாய்க்குறியா, மாஸூப்பா, லந்துவிடாதா போன்ற சினிமா தொடர்பான வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழோ ஆங்கிலமோ எந்த மொழியாக இருந்தாலும் தன்மையாகப் பேசினால் பரவாயில்லை. அதை ஹீரோயிசமாக மாற்றித் திரைப்படங்களில் வரும் வசனம் போல இருப்பது பெரும் பிரச்னை. குழந்தைகளின் மழலையில் இந்த வார்த்தைகள் நுழைந்துவிடலாம்.
வஞ்சத்தை கற்றுக்கொள்வர்
ஒரு கார்ட்டூன் இன்னொரு கார்ட்டூனை அடிப்பது, ஏமாற்றுவது, துன்புறுத்துவது, அடித்துக்கொள்ளத் திட்டமிடுவது, கீழே விழ திட்டமிடுவது… நான் டாம் அண்ட் ஜெர்ரியைத்தான் சொல்கிறேன். இப்படி வஞ்சம், சூழ்ச்சி செயல்கள் குழந்தைகளின் மனதில் பதியும் என மறக்க வேண்டாம்.
ஒரு விஷயத்தை ஜெயிக்கவோ ஒரு போட்டியில் ஜெயிக்கவோ என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணம் உதிப்பதற்கு டிவிதான் முதல் காரணம்.
பெரியவர்கள் பார்க்கும் டிவி சீரியல், கேம் ஷோ, டாக் ஷோ, நடனப் போட்டி, பாட்டுப் போட்டி என அனைத்திலும் வன்மம், சூழ்ச்சி, பகை, வியாபாரம், வன்முறை, கோபம் மறைந்திருக்கின்றன. இதையெல்லாம் சரியா தவறா எனச் சிந்திக்கும் மனநிலை குழந்தைகளுக்கு கிடையாது.
நிஜம் எது எனத் தெரியாமல் போகும்
ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு மனநல மருத்துவர் ஒரு குழந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னார். ”காரை அப்பா ஓட்ட, அம்மா அருகில், பின் சீட்டில் 12 வயது பையன். எதிரே வந்த லாரியில் மோத, அப்பா சீட் பெல்ட் போட்டிருந்தார் என்றாலும் பலத்த காயம். ஆனால் உயிர் போகவில்லை. அம்மாவுக்குப் பலத்த காயம், ரத்தம் வழிந்து அந்த நிமிடமே உயிர்போய்விட்டது. பின் சீட்டில் இருந்த பையனுக்கு காயம்தான் ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. பையன் எந்தவித சத்தமும் போடவில்லை. அம்மாவுக்கு கடைசி சடங்கெல்லாம் முடிந்தும்கூட அழவே இல்லை.” ஏன் இந்தப் பையன் இப்படி இருக்கிறான். ஏதாவது மனநல பாதிப்பா என அவன் அப்பா அழைத்து வந்ததாக டாக்டர் சொன்னார். என்ன பிரச்னை எனக்கேட்ட போது… ‘அம்மாவுக்கு இன்னொரு லைஃப் கிடைக்கும் வீடியோ கேம்ஸ் போல’ எனப் பதில் சொன்னானாம். அவனுக்கு அழ வேண்டும் எனத் தோன்றவில்லையாம். கார் ரேஸ் விளையாடும்போது எத்தனையோ வண்டியை இடிக்கிறோம் என்றானாம். விளையாட்டு எது… நிஜம் எது… உணர்வுகள் எது, உறவுகள் எது என எதுவுமே குழந்தைகளுக்கு புரியவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. எனவே, கவனமாக இருங்கள்.
பெரியவர்களின் அலட்சியம்
‘தெய்வம் தந்த வீடு’ எனப் பிரபலமான நாடகம் ஒன்று… வீட்டில் பெரியவர்கள் பார்பார்கள்போல. அந்த வீட்டுக் குழந்தை, ஏம்மா தெய்வம் தந்த வீட்ல இவ்வளவு பிரச்னை எனக் கேட்டது… இது குழந்தையின் பிரச்னை இல்லை பெற்றோர்களே. நீங்கள் பார்ப்பதால் ஏற்படும் பிரச்னை. நல்லதைப் பாருங்கள். நல்லதைப் பேசுங்கள், நல்லதைச் செய்யுங்கள்க்ஷ் நல்லதைக் கற்றுக்கொடுங்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை ஒவ்வொரு நொடியும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கறுப்பு நிறம் நோயல்ல
குழந்தைகளை அதிகமாக வசீகரிக்கும் விளம்பரங்கள் கூட ஆபத்துதான். நூடுல்ஸ், சாக்லெட், உணவுப் பொருள்கள், மொபைல் ஃபோன் விளம்பரம், ஃபர்வியூம், சோப், கிரீம் விளம்பரங்கள் என எல்லாமே தவறான கருத்தைப் பரப்புகின்றன. நூடுல்ஸ் நல்ல உணவு என்றும், இந்த கிரீம் தடவினால் வெள்ளையாகலாம் கறுப்பாக இருப்பதால் ஏதோ பிரச்னை எனக் குழந்தைகள் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.
மனக்குழப்பம் உண்டாகும்
குழந்தைகள் தங்களை பற்றிப் பெருமையாக கூறும்போதும், தங்கள் வளர்ச்சி குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்போதும் டிவி பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அலட்சியமாகப் பதில் அளிக்காதீர்கள். இதனால் குழந்தைகளின் மனதில் சோர்வு உண்டாகும். தனிமையில் தள்ளப்படுவார்கள். மனக்குழப்பத்தில் பாதிப்பார்கள்.
தனிமை சூழும்
எந்த நேரமும் டிவி முன்னால் உட்கார்ந்து இருக்கும் குழந்தைகளுக்கு உடல் உழைப்பு குறைந்து போகும். மேலும் நண்பர்கள் கிடைக்காமல் அவர்கள் தனித்து இருக்கும் நிலை ஏற்படும்.
டிவி பார்த்துக்கொண்டே இருந்தால் நண்பர்கள் இல்லாமல் விட்டுக்கொடுத்தல், சகோதரத்துவம், நட்பின் முக்கியத்துவம் குறித்துக் குழந்தைகளுக்கு தெரியாமல் போகும். இதனால் அவர்களுக்குப் பல நல்ல விஷயங்கள் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உருவாகாமல் போய்விடும்.
அதிகமாக டிவி பார்க்கும் குழந்தைகள் அடம் பிடிப்பவர்கள்களாக மாறுவார்கள்.
மாற்று வழி என்னென்ன?
0-6 மாத குழந்தைகளுக்கு கிலுகிலுப்புச் சத்தம், அருகில் உள்ள திரைசீலைகள், பெற்றோரின் கொஞ்சல், தாயின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் கவனிப்பு, மரப்பொம்மைகள் இவற்றையெல்லாம் துணையாக்குங்கள்.
6 மாதம் -3 வயது குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கிக்கொடுங்கள். கதைச் சொல்லுங்கள். கதைகளைப் படித்துக் காட்டுங்கள். கதைப் புரிய வேண்டும் என அவசியம் இல்லை.
3-6 வயது குழந்தைகளுக்கு கதைகள், நீதி கதைகள், விளையாட்டுப் பொருட்கள், மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு, மூளையைத் தூண்டும் விளையாட்டு, டிராயிங், பெயின்டிங் இப்படி அவர்களின் இருபக்க மூளையைத் தூண்டும் செயல்பாட்டில் ஈடுப்படுத்துங்கள். அதற்காக குழந்தைகளுக்கு மிலிட்டரி டிரெய்னிங் கொடுத்து விடவேண்டாம்.
6 – 14 வயது வரை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடனே டிவி ஸ்விட்சை ஆன் செய்து, குழந்தைகள் அப்படியே சோபாவில் உட்காருவதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். அவர்கள் வீட்டுக்கு வந்த உடனே உடைகளை மாற்றி, முகம் கழுவி விட்டு, மாலை நேர ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, அதன் பிறகு ஹோம் ஒர்க் எழுதுவது, நண்பர்களுடன் விளையாட்டு என அவர்களைப் பழக்கத்துக்குக் கொண்டு வாருங்கள்.
எந்த நேரத்திலும் எந்தப் பருவத்திலும் தாயும் தந்தையும் குழந்தைக்கு முதல் நண்பராக இருந்தால் அதுவே குழந்தைகளின் வாழ்நாள் பரிசு. குழந்தைகளை மாய உலகத்திலிருந்து மீட்டெடுப்போம். நிஜ உலகில் இயற்கையைக் காண்பித்து சகஉயிர்களையும் மதித்து, போற்றும் குழந்தைகளாக வளர்த்தெடுப்போம்.
மொத்தத்தில் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும்… அதுவே அவர்களுக்கு அழகு… மாய உலகின் ஹீரோயிசத்தைத் தவிர்ப்போம் நண்பர்களே…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply