பிறந்த குழந்தையை கவனிப்பது எப்படி?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கையில் ஒரு பரிசு. அதுவும் உங்கள் அன்பின் அடையாளமாக தவழும் பொக்கிஷம் அது. பத்து மாதங்களை கடந்து இப்போது உங்களின் குழந்தை உங்கள் அருகில் இருக்கிறது. ஒரு பக்கம் வலி, அசதி என உடல் சோர்ந்து போனாலும் மனதில் மகிழ்ச்சி நிரம்பிகிடக்கிறது. உலகமே உங்கள் கையில் இருப்பது போன்ற ஒரு உணர்வு. எதையோ சாதித்தது போல ஒர் திருப்தி. அம்மா எனக் கூப்பிட ஒரு குழந்தை வந்துவிட்டது. இனி ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு முடிவும் நீங்கள் உங்கள் குழந்தையுடன்தான் எடுக்க வேண்டும். நீங்கள் இப்போது ‘New Mom’. நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன எனப் பார்க்கலாமா…
சுகாதாரம் முக்கியம்
கைகளை சானிடைசர் போட்டு சுத்தமாக பராமரியுங்கள். குழந்தை சிறுநீர் கழித்த பிறகெல்லாம் புதிய துணிகளை அவ்வப்போது மாற்றுங்கள். பருத்தி துணிகளைப் பயன்படுத்த வேண்டும். குழந்தையை தொட்டு, தூக்கி, பால் கொடுத்து, பராமரிக்க வேண்டும் என்பதால் சுத்தம், இந்தக் காலத்தில் மிகவும் முக்கியம்.
குழந்தையைக் கையாள்வதில் கவனம்
குழந்தையை ஒவ்வொரு முறையும் கவனமாக தூக்கி உங்களது கையில் வைத்துகொண்டு இன்னொரு கையால் குழந்தையின் கன்னத்தைத் தொட்டு, திருப்பி, பால் கொடுக்கலாம். எப்போதும் உட்கார்ந்துகொண்டே பால் கொடுங்கள். படுத்துக்கொண்டு பால் கொடுத்தால் குழந்தை சரியாக பால் குடிக்காது. மேலும் புரை ஏறும் பிரச்னையும் வரலாம்.
அதீத கொஞ்சல் வேண்டாம்
குழந்தையை வேகமாக தூக்கி, சாய்த்து, மேலேயும் கீழேயும் குலுக்கி சிரிக்க வைத்து, அழுத்தமாக முத்தம் தருவது, குழந்தையை கவனிக்க வைக்க சத்தம் போடுவது… இதுபோன்ற செயல்களை நீங்களோ சுற்றி இருக்கும் நபர்களோ செய்வது குழந்தைக்கு நல்லதல்ல. இதனால் குழந்தை பயப்படலாம் அதேசமயம் காயங்களும் ஏற்படலாம். குறிப்பாக அதீதமாக, வன்முறையாக கையாள்வதால் குழந்தையின் மூளைப் பாதிக்கும்.
குழந்தைக்கான பாதுகாப்பு
தூங்க வைக்கவேண்டுமென்றால், ‘தாலாட்டு பாடுகிறேன்’ என ஆட்டி தூங்க வைப்பதல்ல. குழந்தையை நீங்கள் கம்ஃபெர்டாக உணரவைத்தாலே குழந்தை தூங்க தயாராகிவிடும். யாராவது ஆட்டினால், மடியில் போட்டு ஆட்டிக் கொண்டே இருந்தால்தான் குழந்தை தூங்கும் என்பது கிடையாது. படுக்கையில் குழந்தையை வைத்து நீங்கள் அரவணைத்து, மென்மையான குரலில் தாலாட்டு பாடி தூங்க வைக்கலாம்.
ஆகாய சாகசம் கூடாது
குழந்தையை மேலே தூக்கி போட்டு விளையாடுவது, கால்களை ஆட்டி உங்கள் கன்னத்தில் அடித்து, இழுத்து கொஞ்சுவது.. இதுபோன்ற செயல்களைத் தவிருங்கள். எவ்வளவு மென்மையாக குழந்தையை கொஞ்ச முடியுமோ அதுவே குழந்தைக்கு நல்லது.
தோலுக்கும் தோலுக்கும் இடையிலான அன்பு பரிமாற்றம்
நீங்கள் கைகளால் தொட்டு, நெஞ்சில் சாய்த்துகொண்டு அரவணைப்பதே குழந்தைக்கு பிடிக்கும். உங்கள் ஸ்பரிசத்தால் குழந்தையை கட்டித்தழுவும்போது வரும் அந்த கதகதப்பு குழந்தையைப் பாதுகாப்பாக உணர வைக்கும். பாசம், பந்தம் போன்றவை உங்களுக்கு இடையில் அழகாக மலரும்.
அடிக்கடி குழந்தையிடம் பேசுங்கள்
‘சின்ன குழந்தை பேசுமா, அதுகிட்ட என்னம்மா பேச்சு’ எனச் சிலர் சொல்வார்கள். ஆனால், நிச்சயம் குழந்தை நீங்கள் பேசுவதைக் கவனிக்கும். நீங்கள் பேசுவதும் கொஞ்சுவதும் குழந்தைக்கு புரியும்; உணரும். நீங்கள் குழந்தையிடம் அடிக்கடி பேசுவதால் மூளையின் வளர்ச்சியும் அதிகரிக்கும். பேசும் பழக்கம் கொஞ்சம் சீக்கிரமே தொடங்கிவிடும்.
2-3 மணி நேரத்துக்கு ஒருமுறை பால் கொடுங்கள்
குழந்தைக்கு அடிக்கடி தேவைக்கேற்ப பால் கொடுக்க வேண்டும். தூக்கமும் பால் கொடுப்பதும் குழந்தைக்கு மிக முக்கியம். இந்த இரண்டில்தான் குழந்தையின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. 16 – 20 மணி நேரம் குழந்தை தூங்கும் என்பதால் அதற்கேற்ப உங்களின் மற்ற வேலைகளைத் திட்டமிடுங்கள்.
தொப்புள் கொடி பாதுகாப்பு
10 நாட்கள் அல்லது மூன்று வாரம் வரை குழந்தையின் தொப்புள் கொடி குழந்தையின் உடலில் ஒட்டி இருக்கும் என்பதால் அது குணமாவதற்கு தேவையான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்படி பின்பற்றுங்கள். வயிற்றில் அழுத்தம் தராதபடி, தளர்வான ஆடைகளை அணிவிக்கவும்.
முதுகில் தட்டிவிடுதல்
பால் கொடுத்ததும் முதுகில் மெதுவாக மென்மையாக தட்டிவிடுங்கள். இதனால் குழந்தைக்கு நெஞ்சிலே நிற்பது போன்ற உணர்வு இருக்காது. செரிமானமாகவும் சுகமாக தூங்கவும் வழிவகுக்கும்.
மெல்லிழை, சாப்ட் டாய்ஸ் கவனம்
நூல், மெல்லிழை, ஃபர், பஞ்சு போன்றவற்றால் செய்த பொம்மைகள், மெத்தை, தலையணை போன்ற எதுவும் குழந்தைகள் அருகில் கொண்டு வர வேண்டாம். இதனால் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
அழுதால் உடனே கவனியுங்கள்
‘குழந்தை அதிக நேரம் அழுதால் நுரையீரலுக்கு நல்லது’ எனத் தவறான கருத்து உள்ளது. குழந்தைகள் அழுதால் உடனே குரல் கொடுத்து சமாதானப்படுத்தி தேவைக்கு ஏற்ப பால் கொடுப்பதோ ஈரத் துணியை மாற்றுவதோ தூங்க வைப்பதோ எனச் செய்யுங்கள். கவனிக்காமல் குழந்தையை அழவிட்டால் மனரீதியான ஸ்ட்ரெஸ் குழந்தைகளைத் தாக்கும். பாதுகாப்பற்ற உணர்வால் குழந்தைத் தவிக்கும்.
மருத்துவரின் ஆலோசனையும் முக்கியம்
குழந்தைகள் அழுவதும் வாந்தி எடுப்பதும் இயல்புதான். அதுபோல பேதி, வயிற்றுபோக்கும் இயல்பே. ஆனால், தொடர்ந்து இந்தப் பிரச்னை இருந்தாலோ இயல்புக்கு மீறி இருந்தாலோ சுயமருத்துவம் செய்யாமல் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையைக் கேளுங்கள்.
புதிய அம்மாக்களுக்கான டிப்ஸ்:
- அரை மணி நேரம் கிடைத்தால்கூட அந்த நேரத்தில் ஓய்வு எடுத்துகொள்ளுங்கள்.
- நீங்கள் சரியாக சாப்பிட்டால்தான் குழந்தைக்கும் தாய்ப்பால் மூலம் ஊட்டமளிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
- மிதமான நடைப்பயிற்சி, மூச்சு பயிற்சி, மிதமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். சிசேரியன் செய்தவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றுவது நல்லது.
- கை, முகம், மார்பகங்கள் அனைத்தும் சுத்தமாக பராமரித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை பால் கொடுத்த பிறகு மார்பகங்களை சுத்தப்படுத்துங்கள்.
- தண்ணீரைத் தேவையான அளவு குடிப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், இளநீர், நீர் மோர் எனச் சாப்பிடுங்கள்.
- மூட் ஸ்விங்ஸ் அதிகமாக இருக்கும் ஏனெனில் ஹார்மோன் மாற்றங்கள் நடந்திருப்பதால், அதற்கேற்ப உங்களைத் தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். இதற்காக பயப்பட வேண்டாம். இசை, நல்ல புத்தக வாசிப்பு, குழந்தையின் சிரிப்பு உங்களை மாற்றும்.
- கீரைகள், சிறுதானியங்கள், மீன், முட்டை, காய்கறிகள், பருப்பு-பயறு வகைகள் போன்றவற்றை அவசியம் சாப்பிடுங்கள்.
பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்கவேண்டியவை…பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
தாய்மையை கொண்டாடுங்கள்… தாய்மையை அனுபவித்து வாழுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply