செரிமானப் பிரச்னையினால் உண்டாகும் வயிற்று வலியை வீட்டிலே சரிசெய்வது எப்படி?
Home Remedy For Stomach Pain in kids:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல் என்பது உண்மையிலே ஒரு கலைதான். ஏனெனில் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதைச் சமைக்கும் முறை, ஊட்டும் முறை , உணவூட்டிய பின் செய்ய வேண்டியவை என ஒவ்வொரு செயலிலும் அதீத கவனம் தேவை. இதில் சிறிது தவறினாலும் ஆரோக்கியத்துக்காக அளிக்கப்படும் உணவே அவசியமற்ற பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இதில் முக்கியமான பிரச்னைதான் செரிமானப் பிரச்னை. உணவு சரியாக செரிக்காததால் அஜீரணம் ஏற்படுகிறது.
சில சமயங்களில் நன்றாக சாப்பிட்ட பின்பும்கூட குழந்தைகள் அழுது கொண்டே இருப்பார்கள். வயிற்றில் கை வைத்தாலே கையை எடுத்து விடுவார்கள். சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வாந்தி எடுப்பார்கள். பேசத் தெரிந்த பிள்ளைகளாக இருந்தால் ” வயிறு வலிக்குது, நெஞ்சு எரியுது, தொண்டைல என்னமோ இருக்குது, எச்சில் முழுங்க முடியல, தொண்டை எரியுது” போன்றவற்றைச் சொல்லக் கேட்டிருப்போம். குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் போனதற்கான அறிகுறிகள்தான் இவை அனைத்தும்.
செரிமானப் பிரச்னை என்பது மிகப்பெரிய நோயல்ல. ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டால் அதன் வலி குழந்தைகளை மிகவும் வாட்டக் கூடியதாக மாறிவிடும். சாப்பிட்டவுடன் ஒரு முறை ஏற்பட்ட வலியால் உணவின் மீதே வெறுப்பும் ஏற்படலாம். எனவே, இதைத் தடுப்பதைப் பற்றியும், சரிசெய்வது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
செரிமானப் பிரச்னையை வீட்டிலே சரிசெய்வது எப்படி?
- ஒரு ஸ்பூன் வறுத்து, அரைத்த சீரகப்பொடியை ஒரு டம்ளர் மோர் மற்றும் சிறிது உப்பு கலந்து சாப்பிட்ட பின் குடித்து வர உணவு செரிமானத்தைச் சீராக்கலாம்.
- தோல் நீக்கிய இஞ்சியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வாணலில் போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும். இதனுடன் தண்ணீர் கலந்து 10 நிமிடத்துக்கு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக் கொள்ளவும். வடிநீரில் தேன் அல்லது பனைவெல்லம் கலந்து குடிக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இதைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
- இரண்டு கேரட்டை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேரட் செரிமானத்தை வேகமாக்கும்.
- ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்துடன் ஒரு டம்ளர் சூடான நீரில் 3-5 நிமிடங்களுக்கு ஊற வைத்து குடிக்கவும். செரிமானக் கோளாறால் ஏற்படும் வாயு பிரச்னை மற்றும் வயிற்றுவலியைக் குணப்படுத்துவதில் பெருஞ்சீரகத்துக்கு முக்கிய பங்குண்டு. இதனால்தான் குழந்தைகளுக்கு செரிப்பதற்காகக் கொடுக்கப்படும் கிரைப் வாட்டரிலும் பெருஞ்சீரகம் சேர்க்கப்படுகிறது.
- வெள்ளரிக்காயில் அதிக நார்ச்சத்துடன் நீர்ச்சத்தும் இருப்பதால் உணவை எளிதில் செரிக்க உதவும். இரண்டு வெள்ளரிக்காய்களை அப்படியே கடித்து நன்றாக மென்று சாப்பிடலாம் அல்லது நீர் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து அரைத்தும் குடிக்கலாம்.
- தினமும் சாப்பிட்டு முடித்தவுடன் இருபது நிமிடங்கள் கழித்து ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டுவர செரிமான கோளாறு நீங்குவதோடு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். இதில் உள்ள வைட்டமின் ‘சி’ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
- சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ, பின்போ தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடக் கொடுக்கலாம். அதிக நார்ச்சத்து இருப்பதால் வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாகவும் செயல்படும். இதில், குழந்தைகளுக்கு மலை வாழைப்பழம் சிறந்தது.
செரிமானப் பிரச்னைக்கு ஐஸ் கட்டி ஒத்தடம்
- செரிமானப் பிரச்னையால் குழந்தைகளுக்கு அதிக வயிற்று வலி இருந்தால், சாப்பிட்டு முடித்த அரை மணி நேரம் கழித்து ஐஸ் கட்டிகளை வைத்து அடிவயிற்றில் ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால், சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ந்த நீர் அல்லது வெந்நீரில் குளிக்க கூடாது. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து, செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும்.
- பெப்பர்மின்ட் எண்ணெய்(Peppermint Oil) அல்லது சீரக எண்ணெயை (Cumin Oil) கைகளில் ஊற்றி குழந்தையின் விலா எலும்புகளில் மெதுவாகத் தேய்த்து விடவும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து செரிமானம் சீராவதோடு, இந்த எண்ணெயின் வாசனையைக் குழந்தைகள் நுகரும்போது குமட்டல் பிரச்னையும் நீங்கும்.
- சிறிதளவு புதினா இலைகளை நன்றாக மென்று விழுங்கலாம். புதினாவை அரைத்து சாறு எடுத்தும் குடிக்கலாம். இது வயிற்று தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்கும்.
- இந்தச் சிறு சிறு வீட்டு வைத்தியங்களால் உங்கள் குழந்தையின் செரிமானப் பிரச்னையை எளிதில் போக்கலாம். ஆனால், அவ்வப்போது வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் என குழந்தைகள் அழுதால் மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனைப் பெறுவது நல்லது.
எப்படி தடுக்கலாம்?
எண்ணெயில் பொரித்த உணவுகளையும் துரித உணவுகளையும் அதிகம் தர கூடாது.
உணவில் இஞ்சி, பூண்டு, புதினா, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்ப்பதால் செரிமான கோளாறு வராமல் தடுக்கலாம்.
குழந்தைகளை நன்றாக மென்று சாப்பிட பழக்க வேண்டும்.
குளிர்பானங்களுக்குக் கட்டாயம் ‘நோ’ சொல்ல வேண்டும்.
உணவு உண்ட உடனே உடற்பயிற்சி செய்வதையோ, படுத்து உறங்குவதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஒரே வேளையில் அதிகமாக உண்பதைத் தவிர்த்து சிறிது நேர இடைவெளியில் உணவை சிறிது சிறிதாக சாப்பிட பழக்கலாம்.
தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க வைக்க வேண்டும்.
தூங்க வைப்பதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பாகவே சாப்பிட வைத்து விட வேண்டும்.
மிகவும் இறுக்கமான ஆடைகளைக் குழந்தைகளுக்கு போட்டுவிடக் கூடாது. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதோடு வயிற்றுப் பகுதியையும் இறுக்கி செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தும்.
உணவுப் பழக்கத்தைத் தாண்டி உங்கள் குழந்தையை மகிழ்ச்சியாக இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். மனதில் சிக்கல் இருந்தால் வயிற்றில் சிக்கல் ஏற்படும். எனவே, பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.
குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் – இங்கே க்ளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply